Friday, April 9, 2010

ப . சிதம்பரத்தின் ராஜினாமா நாடகம் ?


நக்சல் தாக்குதலில் மத்திய படை போலீசார் 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்வதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக்கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் அலுவலகம் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்திற்கு தான் முழுப்பொறுப்பேற்பதாகவும், தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தன்னை அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டிருப்பதாக முதலில் உறுதி செய்யப்படாத அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியானது.



ஏதோ தவறு நடந்திருக்கிறது : கடந்த சில நாட்களுக்கு முன்னர் நக்சல்கள் வெறியாட்டத்தில் சட்டீஸ்கரில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த போலீசார் 76 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 வீரர்களும் அடங்குவர். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. பிரதமர் மன்மோகன்சிங் பெரும் கவலை தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்நாளில் நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் இந்த சம்பவத்தில் நக்சல்கள் விரித்த சதி வலையில் சிக்கி கொண்டனர். இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்றார்.



நான் முழு பொறுப்பேற்கிறேன் : இந்நிலையில் இன்று டில்லியில் சி.ஆர்.பி.எப்., சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்று பலரும் பலவிதமாக என்னிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் , கேட்கிறார்கள். இவ்வாறு கேள்விகள் எழுப்ப்படுவதை பார்த்தால் நான்தான் பொறுப்பு என்று அனைவரும் கருதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவத்திற்கு நானே முழுப்பொறுப்பு ஏற்கிறேன் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நமது படை வீரர்கள் கொலை செய்யப்பட்டது எனது மனதை பெரும் அளவில் பாதித்து விட்டது. இதனை என்னால் மறக்க முடியாது. இந்த வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் நாடு என்றும் மறக்காது. இது போன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுப்பது உள்துறை அமைச்சகத்தின் கடமை ஆகும். இதில் இருந்து எனது துறை தவறி விட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் என்று அவர் பேசினார்.



இந்த பேச்சு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. பொறுப்பேற்றால் பதவியில் இருந்து விலகுவதுதான் இது வரை வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. எனவே இவரது பேச்சு ராஜினாமாவின் அறிகுறியா என காலையில் கேள்வி எழுந்தது. இந்நிலையில் ப.சிதம்பரம் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ள விளக்க கடிதத்தில் மத்திய உள்துறையின் தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும், மேலும் இவர் தன்னை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.



காங்., கையில் தான் இருக்கிறது : இது போல் காங்., தலைவர் சோனியாவுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். ஆனால் இவரது ராஜினாமாவிற்கு காங்., தரப்பில் இருந்து எவ்வித அனுமதியும் கிடைக்கவில்லை. ஆந்திராவில் ஏற்பட்ட பிரிவினை மோதல், நக்சல்கள் விவகாரம் மற்றும் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுடன் கருத்து மோதல் என சிதம்பரம் நடவடிக்கைகள் காங்., மேலிடத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இவர் ராஜினாமா செய்வாரா என்பது காங்கிரஸ் மேலிடம் கையில் தான் இருக்கிறது. ராஜினாமா முடிவை பிரதமர் வட்டாரம் ஏற்க மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.



ராஜினாமா வேண்டாம் என்கிறது பா.ஜ., : உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டாம். இவர் ராஜினாமா செய்யவதன் மூலம் மாவோ., நக்சல்கள் வெற்றி பெற்றதாக அமைந்து விடும். நக்சல்கள் ஒழிக்கும் விஷயத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பா. ஜ., முழு துணை நிற்கும். இந்த தருணத்தில் இந்த விஷயத்தை அரசியலாக்கும் எண்ணம் பா.ஜ., வுக்கு கிடையாது. தொடர்ந்து சிதம்பரம் பதவியில் நீடிக்க வேண்டும் பொறுப்பில் இருந்து விலக கூடாது என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.

- நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment