Friday, April 23, 2010

நித்யானந்தாவுக்கு அடி, உதை


இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் நித்யானந்தா நேற்று மாலை விமானத்தில் பெங்களூர் அழைத்து வரப்பட்டார். அங்கு, பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை செய்தனர்.
பெங்களூர் நகரத்தில் நேற்று காலை முதலே ஒரே பரபரப்பு. ‘எப்போது அழைத்து வருகிறார்களாம்? எந்த விமானத்தில் வருகிறார்களாம்...?’ என்று பரவலாக பேச்சு. ‘சாயங்காலம் ஆகி விடும்’ என்ற தகவல் ஓரளவு உறுதியாகி விட்டது. அந்த வி.ஐ.பி.யை காணவும், கண்டித்து குரல் எழுப்பவும் கூட்டம் கூடியது. மேற்கே சூரியன் சிறிது சிறிதாக மறைந்தது. வெளிச்சத்தை இருள் விழுங்கத் தொடங்கியது. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் முன்பாக போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. போலீஸ் வாகனங்களும், சிகப்பு சுழல் விளக்கு கார்களும் அணி வகுத்தன.
விமான நிலையத்தில்: மாலை 6.40... விமான நிலைய ஓடுபாதையில் ஐ.சி.109 பயணிகள் விமானம் பறவை போல் வந்து இறங்கியது. சண்டிகரில் இருந்து வந்த அதன் கதவுகள் திறந்தன. பயணிகள் இறங்கத் தொடங்கினர். அவர்களோடு ஒருவராக, காவி உடையுடன் இறங்கினார் ஒருவர்... அவர், சாமியார் நித்யானந்தா.
பின்னணியில் மப்டி உடையில் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ். அவர்களின் முகத்தில், ஒன்றரை மாதமாக தலைமறைவாகி இருந்த சாமியாரை மடக்கிப் பிடித்து வந்த பெருமிதம். இமாச்சல பிரதேசத்தில் சிக்கிய நித்யானந்தா, சிம்லாவில் இருந்து சண்டிகர் வரை காரில் அழைத்து வரப்பட்டு இருந்தார். அங்கிருந்து விமானத்தில் வந்தார்.
பாலியல் முறைகேடு, நிதி மோசடி, கொலை மிரட்டல், கடத்தல், மத உணர்வை புண்படுத்திய குற்றம். இப்படி, ஏராளமான புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா. நுழைவு வாயிலை நோக்கி நடைபோட தொடங்கினார். வெளியே கூடியிருந்த கூட்டம் ‘ஒழிக கோஷம்’ போட, அந்த பகுதியே அதிர்ந்தது.
அடி, உதை...:இரவு 7.30... வெளியே ஆத்திரத்தில் இருந்தது கூட்டம். அசம்பாவிதம் ஏதாவது நடக்க வாய்ப்பு. உஷாரானது போலீஸ் படை. சாமியாரை பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தது. இவ்வளவு களேபரத்திலும் வழக்கமான பாணியில் நித்யானந்தா. இரு கரங்களை கூப்பி வணக்கம் தெரிவித்தபடி, .... வெளிர் சிரிப்பை உதிர்த்தபடி வந்தார். அதை பார்த்ததும் மக்கள் கோபம் தலைக்கேறியது. ‘இவ்வளவும் செய்துட்டு, சிரிக்கிறத பாருங்கடா...’ என பாய்ந்தனர். காட்டாற்று வெள்ளம்போல் போலீஸ் தடையை தகர்த்தனர். சாமியார் முதுகில் மாறி, மாறி விழுந்தது குத்து. போலீசாலும் அதை தடுக்க முடியவில்லை. நிலை குலைந்து தடுமாறினார் நித்யானந்தா.
காரில் தப்பினார்: ஒருவழியாக, சிகப்பு சுழல் விளக்கு பொருத்திய அம்பாசிடர் காரில் சாமியாரை ஏற்ற போலீசார் முயன்றனர். அந்த ‘கேப்பிலும்’ புகுந்து வந்து சிலர் தாக்கினர். நித்யானந்தாவை தள்ளி விட்டனர். இதை எல்லாம் சற்றும் எதிர்பாராத அவர், அடித்துப் பிடித்து காரில் ஏறிக் கொண்டு கதவை சாத்திக் கொண்டார். அந்த பகுதியே பரபரப்பானது. வேடிக்கை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டம்; அடிப்பதற்கு என்று ஒரு கூட்டம். அந்த பகுதியே ‘ஹவுஸ்புல்’ ஆனது. சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கூட நின்று, உள்ளே நடப்பதை எட்டி பார்த்தனர்.
மருத்துவ பரிசோதனை: விபரீதத்தை புரிந்து கொண்ட போலீசார், வழியில் எங்காவது கூட மக்கள் வழிமறித்து தாக்குவார்கள் என அஞ்சினர். அதனால், நித்யானந்தா செல்லும் வாகனம் எது என்று கண்டுபிடிக்க முடியாதபடி, சாரை சாரையாக வாகனங்களை ஓட விட்டனர். ராம்நகரம் நோக்கி அவை சீறி பாய்ந்தன. அவை அரசு மருத்துவமனையில் போய் நின்றன. டாக்டர்கள் தயாராக இருந்தனர். நித்யானந்தா சரசரவென உள்ளே அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு 2 டாக்டர்கள் உடல் தகுதி சோதனை நடத்தினர். சிறுநீர், ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பார்க்கப்பட்டது. எல்லாம் ஓகே. இந்த பரிசோதனை முடிய இரவு 10.30 ஆனது.

No comments:

Post a Comment