Friday, April 23, 2010

.2 கோடி லஞ்சம் : மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது


பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மருத்துவத் துறையின் மிக உயர்ந்த அமைப்பு இந்திய மருத்துவக் கவுன்சில். ஒரு மருத்துவக் கல்லூரிக்கோ, மருத்துவ நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கவோ, ரத்து செய்யவோ, இந்த கவுன்சிலுக்கு முழு உரிமை உண்டு. மருத்துவப் பட்டங்களுக்கு அங்கீகாரம் தருவதும் இந்த அமைப்பின் பணியாகும்.

இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் கேதன் தேசாய்.இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், குஜராத் பல்கலைக் கழகத்தின் ஆசிரியராகவும், செனட் உறுப்பினராகவும் இவர் தொடர்ந்து இருந்து வருகிறார். இவரை கைது செய்ததின் மூலம் மெடிக்கல் கவுன்சில் பெயர் மிகவும் தரம் தாழ்ந்து, கவுரவத்தை இழந்து நிற்கிறது.கேதன் தேசாய், பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பான புகார் வந்ததும், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்து இடைத்தரகராகச் செயல்பட்ட ஜிதேந்தர் பால் சிங், பாட்டியாலாவைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி டாக்டர் கன்வல்ஜத் சிங்கையும் கைது செய்துள்ளனர்.இவர்களுடைய வீடுகளில் உடனடியாக சோதனை நடத்தப்பட்டது. டில்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட ஆறு இடங்களில் கேதன் தேசாய் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.நாடு முழுவதும் சீரான மருத்துவக் கல்விக்கு வித்திடும் மருத்துவக் கவுன்சிலின் தலைவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.

சி.பி.ஐ., தகவல் தொடர்பாளர் ஹர்ஷ்பால் குறிப்பிடுகையில், 'கேதன் தேசாயும், அவரது உதவியாளர்களும் பஞ்சாப் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க 2 கோடி ரூபாய் கேட்கின்றனர் என்ற தகவல் வந்ததும், அவர்கள் அலுவலகத்துக்குச் சென்று கைது செய்தோம்' என்றார்.டில்லியில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் இந்த மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஓ.பி.சாய்னி, மூன்று பேரையும் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். வரும் 28ம் தேதி வரை இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.இந்த விசாரணையின் மூலம் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக இன்னும் பலர் இந்த வழக்கில் சிக்கக்கூடும் என, சி.பி.ஐ., அதிகாரி ஹர்ஷ்பால் தெரிவித்துள்ளார்.இந்த ஊழல் வழக்கில், பஞ்சாபில் உள்ள கியான் சாகர் மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவர் சுரீந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.212 கோடி பறிமுதல் : சி.பி.ஐ., அதிகாரிகள், 212 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். ஆமதாபாத்தில் கேதன் தேசாய் நடத்தி வந்த மருத்துவக் கல்லூரியில் இருந்த லாக்கரில் இருந்து இது பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் செயலர் விஷ்ணு தத் தன்னுடைய அறிக்கையில், 'எந்தெந்த மருத்துவக் கல்லூரிக்கு எல்லாம் கேதன் அனுமதி தந்தார் என்பதைக் கண்டறிந்து, அவைகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

மருத்துவ கவுன்சிலில் கோடி கோடியா லஞ்சம் : மந்திரிகளுக்கும் தொடர்பா...?சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து வருகிறார். லஞ்சம் பெற்றதாக ஏற்கனவே இவர் மீது வழக்குகள் இருந்தன. இதையெல்லாம் மீறி இந்தப் பதவியில் நீடித்து வருகிறார். மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதையும் தாண்டி, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் பங்குதாரராக தன்னைக் இணைத்துக் கொண்டதாகவும் இவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தொடர்ந்து இத்தகைய உயர் பதவியில் இருந்ததன் மூலம், இந்த துறைக்கு பொறுப்பு வகித்த மத்திய அமைச்சர்களுக்கு இவர் லஞ்சம், மருத்துவ சீட் ஒதுக்கீடு என கொடுத்து தன் பதவியை தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி அனுமதிக்கும் குறைந்தது 20 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.இந்த பணம் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், உயரதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கேதன் தேசாயை முறைப்படி விசாரித்தால், எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும்.இதுபோல நாட்டின் உயரிய பதவிகளில் உள்ளவர்கள் பெரும் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறைக்கு செல்கின்றனர். ஆனால், எந்த தண்டனையும் இன்றி ஓரிரு ஆண்டுகளில் வெளியில் வந்து மீண்டும் அதேபோன்ற உயர் பதவிகளில் அமரும் நிலை நாட்டில் தொடர்கதையாக இருந்து வருகிறது.

சென்னையில் கைதான பாஸ்போர்ட் உயர் அதிகாரி, மருத்துவத் துறை இயக்குனர் என லஞ்சத்தில் சிக்குபவர்கள் பட்டியல் நீள்கிறது. ஒரு சிலநாட்கள் பரபரப்பாக விசாரிக்கப்படும் இந்த வழக்குகள் பின்னர் அப்படியே அமுக்கப்பட்டு விடுகிறது. பதவி இழந்தவர்கள் மீண்டும் உயர் பதவிகளில் வலம் வருகின்றனர்.நாட்டிற்கே இச்சம்பவங்கள் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இந்நிலை இனியும் தொடராவண்ணம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment