Monday, April 12, 2010

பழகலாம் ஆனா பழகக்கூடாது ?


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் திருமணத்துக்கு முன்பாகவே சேர்ந்து பழகி வருவதற்கு, முஸ்லிம் மத அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

டென்னிஸ் வீராங்கனை சானியாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் வரும் 15ம் தேதி, ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிஷா சித்திக் என்ற பெண், சோயப் மாலிக் தன்னை ஏற்கனவே 2002ல் திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவர் மூலம் தான் கர்ப்பமடைந்து கருச்சிதைவு செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.சோயப் மாலிக்குடன் திருமணம் நடந்ததற்கான சான்றிதழையும் ஆயிஷா வெளியிட்டார்.இதையடுத்து, சோயப் மீது வரதட்சணை கொடுமை, மோசடி, மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சோயப்பிடம் விசாரணை நடத்தி, அவரது பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.பிரச்னை பூதாகரமாவதை உணர்ந்த ஆந்திர அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் தலைவர்களும் இந்த விஷயத்தை சுமுகமாக முடிக்க ஆலோசனை நடத்தி, இரு குடும்பத்தினரையும் அழைத்து சமரசம் செய்தனர்; ஆயிஷாவை விவாகரத்தும் செய்தனர்.இதையடுத்து, வரும் 15ம் தேதி சோயப் - சானியா திருமணம் நடைபெற உள்ளது.

ஆனால், திருமணத்துக்கு முன், ஆண், பெண் சேர்ந்து பழகுவது முஸ்லிம் மதத்துக்கு விரோதமானது என, சன்னி உலேமா வாரியம் இவர்களுக்கு 'பத்வா' என்ற மதத் தடை உத்தரவை அளித்துள்ளது.'திருமணத்துக்கு முன் மணமகனும், மணமகளும் ஒரு முறை பார்த்துக் கொள்ளலாம்; மற்ற விஷயங்கள் திருமணத்துக்கு பிறகு தான் நடக்க வேண்டும். ஆனால், சோயப் மாலிக், சானியா வீட்டிலேயே 10 நாட்களாக தங்கியிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுகின்றனர். இவர்களது செயல், முஸ்லிம் மதத்துக்கு அவமானத்தை தேடித் தரக்கூடியது. எனவே, இவர்கள் திருமணத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களது இந்த செயல், திருமணத்துக்கு முந்தைய உடலுறவை ஊக்குவிப்பதாக அமையும்' என, உலேமா வாரியத்தின் நிர்வாகி மவுலானா ஹாசிப் உல் ஹசன் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக விளையாடுவதற்கு, இந்த அமைப்பு ஏற்கனவே 2005ம் ஆண்டு, 'பத்வா' விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவிரவும், சோயப்பின் பாஸ்போர்ட் திரும்ப கிடைக்க இன்னமும் ஒரு வாரம் ஆகும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment