Sunday, April 18, 2010

மதிப்பெண் தயாரித்த பின் விடைத்தாள் கிழிப்பு : ஆசிரியை சஸ்பெண்ட்


தர்மபுரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு குறைந்த கூலி வழங்குவதாகக் கூறி, ஆத்திரமடைந்த ஆசிரியை, விடைத்தாளை கிழித்து கழிவறையில் வீசினார். அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விடைத்தாளை திருத்தி மதிப்பெண் பட்டியல் தயாரித்த பின், கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியும், முகாம் அதிகாரியுமான ரங்கநாதன் தலைமையில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரியை அடுத்த கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கனிஅமுது(41). அவர், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டார். கடந்த 9ம் தேதி ஆசிரியை கனிஅமுதுவிடம், 15 விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட்டன. திருத்தி அவர் ஒப்படைக்கும்போது, 14 விடைத்தாள்கள் மட்டும் இருந்தன. ஒரு விடைத்தாளை காணவில்லை.முகாம் அதிகாரி ரங்கநாதன், அவரிடம் விசாரித்தார். தன்னிடம் 14 விடைத்தாள்கள் தான் தந்ததாகக் கூறி கனிஅமுது, வாக்குவாதம் செய்தார். ரங்கநாதன் தமிழக மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் கார்மேகத்திடம் புகார் தெரிவித்தார்.

போலீசில் தகவல் தெரிவித்து, விடைத்தாளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க கார்மேகம் அறிவுரை வழங்கினார். தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. விடைத்தாள் திருத்தும் மையத்தை போலீசார் சோதனை செய்தனர். கழிவறையில் கிழிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை எடுத்த போலீசார், முகாம் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம், ஆசிரியை கனிஅமுதுவை சஸ்பெண்ட் செய்தார். போலீசார், ஆசிரியை கனிஅமுது மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

ஆசிரியை கனிஅமுது, ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மூன்று முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். கடந்த 2005ல் தர்மபுரி கலெக்டராக பணிபுரிந்த சுதீப்ஜெயின் முன், அவரை கண்டித்து டவுண்... டவுண்... எனக்கூறி ஜீப் மீது ஏறி நின்று, கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். குறிப்பிட்ட ஆசிரியர் சங்கத்தின் பெயரைச் சொல்லி கல்வி அதிகாரிகளை மிரட்டி வந்தார். மாவட்ட கல்வி அதிகாரியாக யார் வந்தாலும், அவர்களுக்கும், ஆசிரியை கனிஅமுதுக்கும் சுமுகமான உறவு இருக்காது. கல்வி அதிகாரிகளை சிக்க வைக்கும் வகையில், விடைத்தாளை கிழித்து எறிந்தார் என்று கூறப்படுகிறது.மன அழுத்தத்தில் செயல்பட்ட அவர், விடைத்தாளை திருத்தி மதிப்பெண் போட்டு விட்டு தான், கிழித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. கல்வித்துறையினர், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment