Sunday, April 18, 2010

4வது நாளாக விமான போக்குவரத்து பாதிப்பு:17 ஆயிரம் சர்வீஸ் முடங்கியது


ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் தூசி மண்டலம், வான்வெளியில் 11 கிலோ மீட்டர் தூரம் பரவியுள்ளதால், 20க்கும் அதிகமான நாடுகளில் நான்காவது நாளாக நேற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப் பட்டது; மொத்தம் 17 ஆயிரம் விமான சர்வீஸ் தடைபட்டிருக்கிறது. இதனால் வர்த்தக பாதிப்பு ஏராளமாகியிருக்கிறது.ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல் என்ற பனி சிகரத்தில் உள்ள எரிமலை கடந்த மாதம் வெடித்துச் சிதறியது. எரிமலை வெடிப்பில் இருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளன.

எரிமலை வெடித்ததால் வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம், அந்த பகுதியில் 11.கி.மீ., சுற்றளவுக்கு வான்வெளியில் பரவியுள்ளது.இந்த சாம்பல் தூசி மண்டலத்தில் நிறைந்து காணப்படும் துகள்களால், விமானங்களின் இன்ஜின்களுக்கும், விமானத்தின் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்படும் அபாயம் இருப் பதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடாவிலும் விமான சேவை பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஐஸ்லாந்து வான்வெளி வழியாகச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் தூசி, காற்றின் வேகம் அதிகம் இல்லாததால் அதே பகுதியில் சூழ்ந்து நிற்கிறது.

சாம்பல் தூசி மண்டலம் எப் போது முழுமையாக மறைந்து, வான் பகுதி சீராகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரங்களில் மாதக்கணக்கில் கூட, இந்த தூசி மண்டலம் காணப்படும்' என, வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் பல ஆயிரம் விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.கப்பல் மூலம் நீண்ட நாட்களுக்கு தாங்கக்கூடிய பொருட்களை மட்டும் தான் அனுப்ப முடியும். காய்கறி, பழங்கள், பூக்கள் போன்றவை விரைவாக சந்தைக்கு அனுப்ப வேண்டும். விமான போக்குவரத்தால் இந்த சந்தை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல அத்தியாவசிய மருந்து பொருட்களின் சப்ளையும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது உலக போரின் போதும், 2001ல் செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போதும் இது போன்ற விமான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.2001ல் செப்டம்பரில் மூன்று நாட்களுக்கு ஐரோப்பிய நாடுகளின் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதை விட மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.கென்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விமானம் மூலம் தினமும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த நான்கு நாட்களாக இந்த பூக்கள் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

ஆசிய நாட்டு விமான நிறுவனங்களும் தங்கள் விமானங் களை ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளன. வெளிநாட்டு பயணிகளின் வரத்து இல்லாத காரணத்தால் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.உலக தலைவர்கள் பாதிப்புவிமான போக்குவரத்து பாதிப்பு காரணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் போலந்து அதிபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.வாஷிங்டனில் நடந்த அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின் விமான போக்குவரத்து இல்லாத காரணத்தால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாடு திரும்ப முடியாமல் ரோம் நாட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவருடன் சென்றவர்களும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சாலை போக்குவரத்து மூலம் அவர் ஜெர்மனிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

No comments:

Post a Comment