Sunday, April 18, 2010

மத்திய மந்திரி தரூர் ராஜினாமா


அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஐ.பி.எல்., கொச்சி கிரிக்கெட் அணியின் பங்குகளை, தனது தோழி சுனந்தாவுக்கு வாங்கிக் கொடுத்த வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் அவருக்கு ஆதரவு இல்லாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நான்காவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, கொச்சி அணி சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்டது. ராண்டவூ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்த அணியை ஏலம் எடுத்தது. இந்த அணியின் பெரும்பாலான பங்குகள், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூரின் தோழியும், பிரபல அழகுக் கலை நிபுணருமான சுனந்தா புஷ்கருக்கு சொந்தமானவை என்ற தகவலை, ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது தோழிக்காக, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பங்குகளை இலவசமாக வாங்கிக் கொடுத்ததாக சசி தரூர் மீது, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் புயலை கிளப்பின. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கம் அளித்த சசி தரூர், 'இது, முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. உள்நோக்கத்துடன் இந்த புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. சசி தரூரின் விளக்கம், காங்கிரஸ் தலைவர்களுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், ஐ.பி.எல்., ஏலத்தின் போது, சுனந்தாவுக்கு உதவியாக சசி தரூரின் விசேஷ அதிகாரி செயல்பட்டதும், காங்கிரஸ் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து, தனது நிலை குறித்து சசி தரூர் விளக்கம் அளித்தார்.பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதை அடுத்து, நேற்று காலை பிரதமரை அவரது இல்லத்தில் சசி தரூர் சந்தித்தார். அப்போது, ஐ.பி.எல்., விவகாரத்தில் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். 'எதிர்க்கட்சிகளால் ஏற்படும் நெருக்கடியை தவிர்ப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்' என, சசி தரூர், பிரதமரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

சசி தரூருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தடுக்கும் வகையில், அவரது தோழி சுனந்தா இறுதிக் கட்ட முயற்சிகளை மேற்கொண்டார். கொச்சி அணியில் தனக்குள்ள பங்குகளை, அணியின் உரிமையாளர்களிடமே திருப்பிக் கொடுக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.உயர்மட்டக் குழு கூட்டம்:இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சசி தரூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் நடந்தது. இந்த கூட்டம், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ராணுவ அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், காங்., தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், சசி தரூர் அமைச்சர் பதவியில்இருந்து வெளியேறுவதே, கட்சிக்கு நல்லது என, முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரண்டாவது முறையாக சசி தரூர் சந்தித்து பேசினார். காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமரிடம் சசி தரூர் முறைப்படி கடிதம் கொடுத்தார். இதன் பின்னர், பிரதமர் இல்லத்திலிருந்து தனியார் வாகனத்தில் சசி தரூர் புறப்பட்டு சென்றார்.சசி தரூரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர், ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பினார். இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவிவந்த சசி தரூர் விவகாரம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம், பார்லியில் இன்று பிரச்னையை கிளப்ப திட்டமிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

No comments:

Post a Comment