Wednesday, April 7, 2010

மும்பை தாக்குதலில் லஷ்கர் -இ- தொய்பாவின் தொடர்பு


கராச்சியில் இயங்கி வரும், மும்பை பயங்கரவாதி தாவூத் இப்ராகிமின் 'டி-கம்பெனி'க்கு, மும்பை தாக்குதலில் முக்கியமான தொடர்பு இருக்கிறது' என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. அமெரிக்க ராணுவ போர் பயிற்சிக் கல்லூரியின் போர் தந்திர ஆய்வுகளுக்கான கல்வி நிறுவனம், மும்பை தாக்குதலில் லஷ்கர் -இ- தொய்பாவின் தொடர்பு குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் இந்தியாவிலிருந்து தப்பி துபாய் சென்று, அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சியில் நிரந்தரமாக தங்கியிருப்பதாகவும் ஆதாரத்துடன் கூறப்படுகிறது. அதோடு ஆயுதக் கடத்தலிலும் தொடர்பு இருக்கிறது. கராச்சியில், தாவூத்தின் 'டி-கம்பெனி' இயங்கி வருகிறது. அதன் லாபங்கள் முழுவதும், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ். ஐ., ஆதரவு பெற்ற லஷ்கர் போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்குத் திருப்பி விடப்படுகிறது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: லஷ்கர் மற்றும் டி-கம்பெனி தொடர்பு 1993ல் அல்லது 1994ன் முதல் பகுதியில் ஏற்பட்டிருக்க வேண்டும். முசாபராபாத்தில் ஐ.எஸ்.ஐ.,யின் பாதுகாப்பான வீடு ஒன்றில் டைகர் மேமன், ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் முன்னணித் தலைவர்களுடன் இருப்பது போல கிடைத்துள்ள போட்டோக்கள், காஷ்மீரில் மாபியா பணம் விளையாடுகிறது என்பதற்கு முதல் ஆதாரமாகிறது. தாவூத் மற்றும் ஐ.எஸ்.ஐ.,யின் முழுமையான ஆதரவுடன், உலகம் முழுவதும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் லஷ்கர் தனது கிளைகளை நிறுவியுள்ளது. லஷ்கருக்கு நிதியுதவி அளித்து வரும் சவுதி அரேபியாவில் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகள் உள்ளனர். டி-கம்பெனி தனது சொத்துகளில் சிலவற்றை சவுதி அரேபியாவுக்கு மாற்றியுள்ளது. அதன் மூலம் லஷ்கருக்கு நிதியுதவி தொடர்ந்து கிடைக்க வழியிருக்கிறது. கிழக்கு ஆப்ரிக்காவிலும் டி-கம்பெனி மூலம் லஷ்கர் தனது காலை ஊன்றியிருக்கிறது.

தாவூத்தின் தம்பி அனீஸ் இப்ராகிம், கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் கப்பல் தொழிலில் முதலீடு செய்துள்ளான். இதன் மூலம் டி-கம்பெனியின் கடத்தல் தொடர்ந்து நடக்க வழி கிடைத்துள்ளது. கென்யாவின் மொம்பாசாவில் கைது செய்யப்பட்டுள்ள லஷ்கர் பயங்கரவாதி செய்யது அப்துல் கரீமும், தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க டி-கம்பெனியின் மூலம் தான் முயன்றுள்ளான். மொம்பாசாவின் கொழுத்த தொழிலதிபர்களுடன் தாவூத்துக்குத் தொடர்பு உள்ளது. இந்தத் தகவல்கள் அல்-குவைதாவுடன் தாவூத்திற்கு இருக்கும் நெருக்கத்தைக் காட்டுகின்றன. அதேநேரம் ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சவுதியில் தாவூத் டி-கம்பெனியை நிறுவியதன் மூலம், அதை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதனால், காஷ்மீர் விவகாரத்தில் சவுதியின் பங்கும் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment