Tuesday, April 20, 2010

இந்திய சுற்றுலா வரவை குறைக்கும் இந்திய அரசின் தவறான கொள்கை


சுற்றுலா விசாவை இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது முறை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு, மலேசிய இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மும்பை தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட டேவிட் ஹெட்லி, சுற்றுலா விசாவை பயன்படுத்தி அடிக்கடி இந்தியாவுக்கு வந்து சதித் திட்டம் தீட்டினான். இவனைப் போல மற்ற பயங்கரவாதிகளும் சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதால், இந்த விசாவை பயன்படுத்தி இரண்டு மாதத்திற்குள் மீண்டும் இந்தியா வருவதற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விதிமுறை, கடந்த ஜனவரியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியா ஜனத்தொகையில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள்; இதில், 7 சதவீதம் பேர் தமிழர்கள். இவர்கள் தமிழகத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காகவும், இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும் அடிக்கடி வந்து செல்ல வேண்டியுள்ளது. மத்திய அரசின் புதிய விசா விதிமுறையால், இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஏராளமான இந்தியர்கள், மலேசியாவில் உள்ள இந்திய தூதர் விஜய் கோகலேவை சந்தித்து தங்கள் சிரமத்தை தெரிவித்துள்ளனர். இவர்களது புகாரை ஏற்றுக்கொண்ட கோகலே, 'உங்களது கருத்தை இந்திய அரசிடம் தெரிவிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.சுற்றுலா விசா கட்டணம் 2 ஆயிரத்து 240 ரூபாய்; வர்த்தக விசா கட்டணம் 6 ஆயிரத்து 600. எனவே, பலரும் சுற்றுலா விசாவை பயன்படுத்துகின்றனர். மத்திய அரசின் புதிய விதிமுறையால், மலேசியாவில் உள்ள சுற்றுலா ஏஜன்டுகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- ப்ரிக்க்பீல்ட்ஸ் ஸ்ரீதரன் , மலேசியா .

No comments:

Post a Comment