விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் பூர்வீக வீடு இலங்கை வல்வெட்டித் துறையில் உள்ளது. விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு வீழ்த்தப்பட்ட பிறகு இலங்கையின் மற்றப்பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்தை இணைக்கும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.
விடுதலைப்புலிகள் பற்றிய பயம் இல்லாததால் சிங்களர்கள் வடக்கில் ஈழம் பகுதிக்கு தினமும் சுற்றுலா பயணிகளாக வந்தனர். குறிப்பாக பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீட்டை பார்க்க சிங்களர்களிடம் ஆர்வம் அதிகரித்தது.
பெரும்பாலான சிங்களர்கள், பிரபாகரன் பிறந்த வீட்டில் இருந்து சிறிது மண் எடுத்துச் செல்வதை காண முடிந்தது. பிரபாகரன் பிறந்த வீட்டை வீரம் விளைந்த மண்ணாக அவர்கள் கருதுகிறார்கள்.
பிரபாகரனுக்கு சிங்கள மக்களிடமும் செல்வாக்கு ஏற்படுவதைக் கண்டு சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு எரிச்சலும், ஆத்திரமும் ஏற்பட்டது. இதனால் சில தினங்களுக்கு முன்பு பிரபாகரன் வீட்டை அவர்கள் இடித்து நொறுக்கி விட்டனர்.
வன்னியில் உள்ள மாவீரர்களின் நினைவுச் சின்னங்களை அழித்து விட்ட சிங்களப்படையினர் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவு தூணை இடித்துத் தள்ளினார்கள். தற்போது பிரபாகரன் வீட்டை இடித்துள்ளனர்.
தெற்கில் இருந்து வரும் சிங்களர்கள் கடந்த சில தினங்களாக வல்வெட்டித் துறை செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பிரபாகரன் வீடு இருந்த பகுதிக்கு யாரையும் விடக்கூடாது என்பதில் யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினர் தீவிரமாக உள்ளனர்.
கொழும்பில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment