Wednesday, April 14, 2010

தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம்


உலகநாடுகளில், தேங்காய் உற்பத்தி திறனில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, தேங்காய் விலை குறையும் வாய்ப்புள்ளது.

இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகள் உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. ஆசிய பசிபிக் தேங்காய் குழுமத்தின் கணக்கீட்டின் படி, உற்பத்தி திறன் வரிசையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அறிவித்துள்ளது. தேங்காய் உற்பத்தியில் 47 சதவீதம் சமையல், 35 சதவீதம் எண்ணெய் உற்பத்தி, 11 சதவீதம் இளநீர், ஏழு சதவீதம் கொப்பரைக்காவும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் 35 சதவீதமாக இருந்தாலும், எண்ணெய் விலையை வைத்தே, தேங்காய் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் அமைகின்றன.

இந்தியாவில் மார்ச் - ஜூனில் அதிகமான தேங்காய்வரத்து இருக்கும் என எதிர்பார்ப்பதாலும், வரியில்லாத பாமாயில் இறக்குமதி காரணமாகவும், வரும் ஜூனில் தேங்காய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நடப்பு கோடைகாலத்தில், இளநீர் தேவை அதிகமாக இருப்பதால், தேங்காய் விலை மிகவும் குறைய வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மைய ஆய்வின்படி, 'மார்ச் முதல் ஜூன் வரை பண்ணை அளவில் தேங்காய் விலை ஒன்றுக்கு 4.25 முதல் 4.80 ரூபாய் வரை இருக்கும்' என, கணக்கிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி கூறுகையில்,''தேங்காய்வரத்து அதிகரிக்கும் என்பதால், ஜூனில் தேங்காய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தேங்காய் இருப்பு வைத்துள்ளவர்கள், அவற்றை விற்பது நல்லது,'' என்றார்.

- மதுமிதா .

No comments:

Post a Comment