Friday, April 16, 2010

திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் வக்கீலாக பணி புரியலாம்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சீனிவாசராவ் உள்பட 20-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஒரு மனுதாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு பெற்றுள்ளவர்கள் பி.எல். பட்டம் பெற்றுள்ளனர். டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அவர்களுக்கு பி.எல். பட்டம் வழங்கியுள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களது பட்டம் செல்லாது, அவர்களது வக்கீல் பதிவும் செல்லாது என்று கூறியது. இது இந்திய பார் கவுன்சில் சட்டத்தை மீறியதாகும். எனவே மீண்டும் பதிவு செய்து வக்கீலாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர். பானுமதி, சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல்கள் என்.ஆர். சந்திரன், சங்கர சுப்பு, விஜயேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.

இந்திய பார் கவுன்சில் 4 நிபந்தனைகள் விதித்துள்ளது. அந்த நிபந்தனைகள் படி இவர்கள் தகுதியானவர்கள். எனவே அவர்களை வக்கீலாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.

நீதிபதிகள் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு அளித்த தீர்ப்பில், ஏற்கனவே தமிழ்நாடு பார் கவுன்சிலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் பதிவு செய்து பணியாற்ற அனுமதிக்கிறது. இதே வகையில் வரக்கூடியவர்களுக்கு பார் கவுன்சில் உரிய விதிமுறைகள் வகுத்து தர வேண்டும். அவர்களை வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment