Tuesday, April 6, 2010
'பாஸ்போர்ட்' பறிமுதல்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணக்க உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் பாஸ்போர்ட்டை, ஐதராபாத் போலீசார் பறிமுதல் செய்து முடக்கினர். வரதட்சணை கொடுமை, மிரட்டல், திருமண மோசடி உள்ளிட்ட குற்றங்களின் கீழ் மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், வரும் 15ம் தேதி டென்னிஸ் நட்சத்திரம் சானியாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த நேரத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண் சர்ச்சையை கிளப்பினார்.தனக்கும், சோயப் மாலிக்கிற்கும் இடையே, 2002ல் தொலைபேசி மூலம் திருமணம் நடந்ததாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப்படி சோயப் மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (506), திருமண மோசடி(420), வரதட்சணை கொடுமை (498, ஏ) உள் ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
'பாஸ்போர்ட்' பறிமுதல்: இதில் அதிரடித் திருப்பமாக, திருமணம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க, சானியா வீட்டுக்கு வந்த சோயப் மாலிக்கிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷனர் திருமலா ராவ் கூறியதாவது: மாலிக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. சானியா வீட்டில் உள்ள மாலிக், போலீசாருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தார். அப்போது சானியாவும் உடனிருந்தார்.மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது 'பாஸ்போர்ட்' மற்றும் மொபைல்போன் தற்போது எங்கள் வசம் உள்ளது. அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதை விமான நிலைய மற்றும் குடியேற்ற அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளோம்.மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு முதல் ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்க முடியும். இப்பிரச்னைக்கு 15ம் தேதிக்குள் தீர்வு காண வேண்டியுள்ளது.இவ்வாறு திருமலா ராவ் கூறினார்.
அதே சமயம் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஆயிஷாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலிக்கை ஆயிஷா திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் உண்மை தானா என்பதை கண்டறிய இந்த சான்றிதழ், நாசிக்கில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. ஆயிஷா, 2000ம் ஆண்டு மாலிக்கை சந்தித்தது தொடர்பான, 'சிடி'க்கள் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
ஆயிஷாவுக்கு கருச்சிதைவு: சோயப்புடன், ஆயிஷா உடலுறவு கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் திருமணத்துக்கு முன்னதாகவே கருவுற்று பின்னர் அபார்ஷன் செய்து கொண்டார். கர்ப்பம், கருச்சிதைவு செய்து கொண்டது இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை நாங்கள் போலீசிடம் அளித்துள்ளோம் என, ஆயிஷாவின் உறவினரும் டாக்டருமான ஷாம்ஸ் பாபர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 'சோயபும், ஆயிஷாவும் ஐதராபாத் ஓட்டலில் தங்கியிருந்த போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் அவரது மனைவி சங்கீதாவும், சோயப்புக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர். சோயப் மாலிக்கிடமிருந்து நாங்கள் பணமோ, வேறெந்த உதவியையோ எதிர்பார்க்கவில்லை. ஆயிஷாவை மணந்து கொண்டதை ஒப்புக்கொண்டு முறைப்படி விவாகரத்து செய்யட்டும். நாங்கள் அவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்' என்றார்.
ஆயிஷாவின் வக்கீல் டபிள்யு ரஹ்மான் குறிப்பிடுகையில், 'ஆயிஷாவை சந்தித்ததேயில்லை என்கிறார் மாலிக். ஆனால், இருவரும் 2002ம் ஆண்டு முதல் 12 முறை சந்தித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை போலீசிடம் சமர்ப்பித்துள்ளோம்' என்றார். ஆயிஷாவுடன் சோயப் இருக்கும் போட்டோ படங்களையும் நிருபர்களிடம் காட்டினார்.
ஆனால் சோயப் மாலிக் நிருபர்களிடம், ' நான் ஒன்றும் ஆயிஷாவிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் வயது 18, அப்போது ஆயிஷாவை 'ஆபா' (அக்காள் என்று அர்த்தம்) என்று தான் அழைப்பேன். அவர் ஏன் நிருபர்களை சந்திக்க மறுக்கிறார்' என்று கேட்டார்.
அருகில் இருந்த சானியா , எங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எதிர்காலக் கணவர் பற்றி இப்படி எல்லாம் தகவல் வெளிவருவது பரபரப்பாக இருக்கிறது' என்றார்.
ஒத்துழைப்பு: சோயப் மாலிக் குறிப்பிடுகையில், 'போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அதுவரை இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன். நானும், சானியாவும் கவுரவமான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். ஆயிஷாவுடன் திருமணமானது தொடர்பான கேள் விக்கு பதில் சொல்வது, எங்களுக்கு கஷ்டமாக உள்ளது' என்றார்.
பாக்., உதவ தயார் : சோயப் மாலிக்குக்கு எந்த உதவியையும் செய்ய அந்நாட்டு அரசு காத்திருக்கிறது என, பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மாலிக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விவரங்களை இந்திய ஹைகமிஷனிடம் அந்நாட்டு அரசு கோரியுள்ளது.இதற்கிடையே ஆயிஷாவின் தந்தையின் சார்பில் பாகிஸ்தான் கோர்ட்டிலும் மாலிக் மீது திருமண மோசடி வழக்கு தொடரப் பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மாலிக்குக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும்.மாலிக் தான் செய்த ஊழல் பணம் ஒன்பது கோடி ரூபாயை சானியாவிடம் கொடுத்துள்ளதாக, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
- மதுமிதா .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment