Monday, May 10, 2010

அரசியலுக்கு வருவேன் - நடிகர் விஜய் சவால் ?

"நான் மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிகர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவைப்பட்டது. என் ரசிகர்கள் கம்ப்யூட்டர்கள் வழங்குதல், ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று பல்வேறு பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய நற்பணிகளை விளம்பரப்படுத்தவோ, வெளிச்சப்படுத்தவோ நான் விரும்பாததால், அது ஒரு மவுன புரட்சியாக நாளுக்கு நாள் வேகத்துடன் நடந்து வருகிறது. மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

'உண்மையான உணர்வுள்ள நூறு இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அந்த பேச்சின் வலிமை, தன்னம்பிக்கை எனக்கு பிடித்த விஷயம். அதே பாணியில்தான் உண்மையான உணர்வுள்ள, சமூக அக்கறை கொண்ட துடிப்பான இளைஞர்களை என் மக்கள் இயக்கத்துக்கு எதிர்பார்க்கிறேன். பொதுவாக நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும், சூழலும் முக்கியம் என கருதுபவன் நான். அரசியல் என்பது ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று என் இயக்கத்தினரையும் தயார் படுத்தி வருகிறேன். எப்போதும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அதை பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைச்சாக்கூட மாத்திக்க மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான். மக்களுக்கு பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதுடன், மக்களுக்காக முன்னின்று போராடவும் தயங்கமாட்டேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்த அருமை மக்களுக்காக, போராட எப்போதும் நான் தயார்நிலையில் இருக்கிறேன். என்னை ஒரு சகோதரனாக, மாணவ சமுதாயத்தினர் ஒரு சக மாணவனாக, பெரியோர்-தாய்மார்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக என்னை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்.

இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பிரவேச சர்ச்சையில் அதிக அளவு சிக்கியிருக்கும் விஜய், அவ்வப்போது அரசியல் குறித்து பேசுவதும், அதன் பின்னர் பின்வாங்குவதும் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியதன் மூலம் தமிழக அரசியலிலும் பரபரப்பு கிளம்பியது. விஜய் காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார், இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் போகிறார் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டன. அந்த சமயத்தில் தமிழகத்திற்கு வந்திருந்த ராகுலும், விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து விஜய்யின் அரசியல் பிரவேசம் உறுதி என்று செய்திகள் வெளியாயின. அதேநேரம் விஜய் காங்கிரசில் சேர்ந்தால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று வெளிநாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் தீர்மானம் போட்டன. இதையடுத்து விஜய் அளித்த பேட்டியில், நான் ராகுலை சந்தித்து பேசியது உண்மைதான். அவர் எனது நண்பர். எனது மக்கள் இயக்கம் பற்றியும், அரசியல் குறித்தும் பேசினோம் என்றும், பிற்காலத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்றும் கூறினார். இந்நிலையில் இப்போது மீண்டும் தனது அரசியல் பிரவேசம் குறித்து விஜய் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment