Monday, May 10, 2010

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவு; சட்டசபையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்


சட்டசபையில் போலீஸ் துறை மானிய விவாதத்துக்கு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:-

இங்கு ஆளுங்கட்சியினரும், தோழமை கட்சியினரும் போலீஸ் பணிகளை பாராட்டி சிறப்பாக பேசினார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டன கணைகளை தொடுத்து பேசினார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.

இந்த ஆட்சி இதை நிச்சயமாக அலட்சியப்படுத்தி விடாது. காய்ந்த மரம் தான் கல்லடிப்படும் என்பார்கள். அது உண்மைதான். சிறு சிறு சம்பவங்களை காரணம் காட்டி சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டதாக கூறி மாய தோற்றத்தை உருவாக்கி விடக்கூடாது.

கொலை-குற்ற நிகழ்வுகளை கண்டு பிடிப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால் 2009-ல் 1 லட்சத்து 74 ஆயிரத்து 691 வழக்கு பதிவு செய்யப்பட்டதில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 200 வழக்குகளில் கண்டு பிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போல பொருட்களை மீட்பதிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

ரூ. 80 கோடியே 22 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனதில் ரூ. 58 கோடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதே போல சொத்து கண்டு பிடிப்பு வழக்குகள் 79 சதவீதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொலை குற்றம் பட்டியலை விவரித்து பேசினார்கள். 2007-ல் 1521 கொலையும், 2008-ல் 1630 கொலையும், 2009-ல் 1644 கொலையும் நடந்து உள்ளது. இதில் உணர்ச்சி வசப்பட்டு நடந்த கொலைகள்தான் அதிகம்.

2009-ல் நடந்த 1644 கொலைகளில் 453 கொலைகள் குடும்ப சண்டை வாய்தகராறில் நடந்து உள்ளது. முன் பகையில் 272-ம், காதல் வழக்குகளில் 117-ம், நிலத்தகராறில்102 கொலைகள் நடந்துள்ளது. பணம்-லாபத்துக்காக நூற்றுக்கும் குறைவான கொலைகளே நடந்து உள்ளது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ் நாட்டில் கொலை குற்றங்கள் குறைவாக நடந்துள்ளது. 95 சதவீத குற்றவாளிகளை கண்டு பிடித்து இந்த அரசு கைது செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment