Wednesday, May 5, 2010

தமிழர் அல்லாத குஷ்பு இப்படி பேசியிருப்பது நல்ல விஷயம் தான்



'தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக கதாநாயகிகளை தேடி மும்பைக்கும் கேரளாவுக்கு போவதை நிறுத்துங்கள். தமிழ் ‌பேச தெரிந்தவர்களை தமிழ் படங்களில் நடிக்க வையுங்கள்' என்று தமிழ் திரையுலகிற்கு நடிகை குஷ்பு அட்வைஸ் செய்துள்ளார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் தயாரிப்பில், ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம், `வெளுத்து கட்டு' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில், கதிர் - அருந்ததி என்ற புதுமுகங்கள் நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். சேனாபதி மகன் இயக்குகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்தது. முதல் சி.டி‌.யை நடிகர் விஜய் வெளியிட, நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய குஷ்பு, ``ஒருவர் படம் தயாரிக்க விரும்பினால் உடனே தெரிந்த வடநாட்டு நடிகை யாராவது இருக்கிறாரா, வேற்றுமொழி நடிகை இருக்கிறாரா? என்றுதான் தேடுகிறார்கள். தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசும் அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்தலாம். தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை தேடி கேரளாவுக்கும், மும்பைக்கும் போவதை நிறுத்த வேண்டும். நன்றாக தமிழ் பேச தெரிந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் விஜய் பேசுகையில், ``எங்க அப்பா எப்போதுமே ஓடுகிற குதிரையில் சவாரி செய்வதை விரும்ப மாட்டார். அவராகவே புது குதிரைகளை உருவாக்கி, அதில் சவாரி செய்வதையே விரும்புவார். அவர் புதுமுகங்களை வைத்து படம் பண்ணி, நிறைய வெற்றிகளை கொடுத்து இருக்கிறார். விஜயகாந்த், ரகுமான், நான் போன்றவர்கள் அப்பாவின் கண்டுபிடிப்புகள்தான். சிம்ரனைக்கூட `ஒன்ஸ்மோர்' படத்தில் அப்பாதான் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் கதிர், அருந்ததி என்ற இரண்டு பேர்களை அறிமுகம் செய்து இருக்கிறார். என் அப்பாவின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது, என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார். `குஷ்பு மேல்சபை உறுப்பினர் ஆகப்போகிறார் என்று பேச்சு அடிபடுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். வரப்போகிற மேல்சபையில் பெண்கள் 50 சதவீதம் இருந்தால் நல்லது, என்றார் பார்த்திபன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, `கலைப்புலி' எஸ்.தாணு, எடிட்டர் மோகன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், சினேகன், இசையமைப்பாளர் பரணி ஆகியோரும் பேசினார்கள்.

தமிழர் அல்லாத குஷ்பு இப்படி பேசியிருப்பது நல்ல விஷயம் தான் .

- நெருப்பன் .

No comments:

Post a Comment