Monday, May 17, 2010

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மாரடைப்பால் இறந்தார்


பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 62. இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது.பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன், 1977ம் ஆண்டிலிருந்து சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக் கணக்கான நாவல்களும் எழுதியுள்ளார்.இவர் எழுதிய, 'சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள்' உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. இவரது, 'மழைக்கால மல்லிகைகள், சந்திப்பு தொடரும்' நாவல்கள் பிரபலமானவை.

'தினமலர்' வாரமலரில், 'அன்புடன் அந்தரங்கம்' தொடர் எழுதி வந்தார். அவரது எழுத்துக் கள் பல விருதுகளை அவருக்குப் பெற்றுத்தந்தன.சென்னை திருவான்மியூரில் வால்மீகி நகரில் ராஜகோபால் முதல் தெருவில் வசித்து வந்தார். சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

ஒருவாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர், நேற்று மாலை மாரடைப் பால் இறந்தார். அவரது உடல் நேற்று இரவு வால்மீகி நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு சுதா, சுபா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அனுராதா ரமணனின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்கிறது.

No comments:

Post a Comment