Thursday, May 27, 2010

அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி புரியும்



"வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி புரியும்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், வைகைச் செல்வன், மாவட்டச் செயலர்கள் சேகர்பாபு, செந்தமிழன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கள் மதுசூதனன், பொன்னையன், வளர்மதி, முன்னாள் எம்.பி., கோகுல இந்திரா உட்பட ஏழு பேர் பேசினர்.

அவர்களில் சிலர் பேசியதாவது: "முத்துசாமி தனது மனக்குறைகளை என்னிடம் சொல்லலாம், அவரது பிரச்னைக்கு தீர்வு காணலாம்' என்று ஜெயலலிதா கூறினார். ஆனால், முத்துசாமி இந்த செயற்குழு கூட்டத்துக்கு வரவில்லை. முத்துசாமி கட்சியை விட்டு வெளியேறுவதால் அ.தி.மு.க.,வுக்கு எந்த சேதாரமும் இல்லை; அவரது கடிதமும் வரவில்லை. ஜனதா கட்சியிலிருந்து அவர் வந்தவர். அவர் உண்மையான கட்சிக்காரர் கிடையாது; அவர் ஒரு டூப்ளிகேட். கொள் கையை அடகு வைத்து விட்டார். தேர்தல் சுற்றுப் பயணத்தில் மக்களிடம் ஜெயலலிதா தனது முகத்தைக் காட்டினால் போதும். மக்கள் ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் போடுவதற்கு தயாராக உள்ளனர். சுற்றுப்பயணம் செல்லும் போது வேனில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதாவை ஒரு சிலர் தான் பார்க்க முடிகிறது; பலர் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். அனைவரும் பார்க்கும் வகையில் பாதுகாப்பு வசதி கொண்ட வேனில் ஜெயலலிதா நின்று கொண்டு பிரசாரம் செய்ய வேண்டும். ஒரு சில மாவட்டச் செயலர்கள் தனக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கும் வகையில் செயல்படுகின்றனர். இதனால், கட்சியினர் அதிருப்தி அடைகின்றனர். முத்துசாமியை உடனடியாக கட்சியை விட்டு நீக்குங்கள். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: முத்துசாமியின் மனக்குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம், அவரது பிரச்னையை சொல்லி தீர்வு காணலாம் என அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். அவரும் தனக்கு உடல்நலம் சரி இல்லை என்றும், கடிதம் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அவர் என்னை சந்திக்க வருவார் என எதிர்பார்த்தேன்; அவர் வரவில்லை. எனக்கு 62 வயதாகிவிட்டது. பக்குவம் அடைந்த ஒரு தாயாக இருக்கிறேன். இந்த இயக்கத்திலிருந்து ஒருவர் வெளியேறுவதை கூட நான் விரும்ப மாட்டேன். அண்ணாதுரை, எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின்படி தான் நான் நடந்து வருகிறேன். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்ட சிலர் நினைத்தனர். பல போராட்டங்களை கடந்து தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். என்னை பழித்து பேசியவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்துள் ளேன். எம்.எல்.ஏ., அமைச்சர் என பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்துள்ளேன்.

சில தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறோம்; மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறோம். அனைவரும் கோஷ்டிப்பூசல் இல்லாமல் கட்சிப் பணிகளை ஆற்ற வேண்டும். கட்சியினருக்கு மனக்குறைகள் இருக்கலாம். உங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியும். கட்சியில் உழைப்பவர்களுக்கு நிச்சயம் பதவி உண்டு. மீண்டும் எம்.ஜி.ஆர்., ஆட்சி மலரும். குடும்ப ஆட்சியை அவர்களது வீட்டுக்கே அனுப்பி வைப்போம். வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும். அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட புதிய சட்டசபை நமக்கு தேவையில்லை. பாரம்பரியம் மிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நமது ஆட்சியை நடத்துவோம். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

முதல்வரை துதி பாடுவதற்காக செம்மொழி மாநாடு: "மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்னைகளால் தமிழக மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில், மற்றவர்கள் தன்னை பாராட்டி துதி பாட வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது வேதனைக் குரியது' என, அ.தி.மு.க., செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அ.தி.மு.க., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு என பல பிரச்னைகளால் தமிழக மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உலகில் உள்ள தமிழ் இனமே கவலையில் ஆழ்ந்திருக்கிறது. இந்த நேரத்தில், உலகத் தமிழ் மக்களின் பணத்தை வீணாக்கி செம்மொழி மாநாட்டை தி.மு.க., நடத்துகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில், மற்றவர்கள் தன்னை பாராட்டி துதி பாட வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது வேதனைக்குரியது.

* முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்திற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்தும் அதை செயல்படுத்த கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கேரளாவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளார். ஆந்திர அரசு பாலாறு, பென்னையாற்றின் குறுக்கே தடுப் பணை கட்டும் பணியில் தீவிரம் காட்டியுள்ளது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

* தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் கங்கை, காவிரி இணைப்பு என்பது தென்னக நதிகள் இணைப்பு என மாறி விட்டது. பின், தமிழக நிதிகளின் இணைப்பு என்று சுருங்கி விட்டது. தேசிய நதி நீர் இணைப்பின் அவசியத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தாத தி.மு.க., அரசிற்கு செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது.

* தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (கோவை), அண்ணா பல்கலைக்கழகம் (திருச்சி), அண்ணா பல்கலைக்கழகம் (நெல்லை) என பிரிக்கப்பட்டது. தனக்கு வேண்டியவர்கள், துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெறுவது தான் இதன் நோக்கம். தற்போது மதுரை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என்ற புதிய பல்கலையும் உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் இது போன்ற நடவடிக்கை ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment