Monday, May 3, 2010

மர்ம காரில் வெடிகுண்டு


அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள, 'டைம்ஸ்' சதுக்கத்தில், நேற்று மர்ம காரில் இருந்த வெடிகுண்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க் போலீசார் விரைந்து செயல்பட்டு அக்குண்டை செயலிழக்கச் செய்தனர். இதனால், பயங்கர குண்டு வெடிப்பு தவிர்க்கப்பட்டது. போலீசாரின் விரைவான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலுள்ள, 'டைம்ஸ்' சதுக்கம், உலகின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. உலகின் பல பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர். அதனால் இப்பகுதி எப்போதும் பரபரப்பும் நெரிசலும் மிகுந்ததாக இருக்கும்.

நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள 45வது தெருவில், ஒரு மர்ம கார் நின்றிருந்தது. விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படும், 'நிசான் பாத்பைண்டர்' ரக அடர்பச்சை நிறம் உடைய அந்தக் காரின் பின்புறத்திலிருந்து புகை வெளிவந்திருக்கிறது. ஆபத்துக் காலத்தில் எரியும் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.அருகில் இருந்த 'டி-ஷர்ட்' கடையின் வியாபாரி, மர்ம காரிலிருந்து வரும் புகையையும் விளக்கு ஒளிர்வதையும் பார்த்து விட்டு, போலீசாருக்குத் தகவல் அனுப்பினார். உடனடியாக அப்பகுதியில், நியூயார்க் போலீசார் குவிக்கப்பட்டனர்.தொடர்ந்து காரிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், உள்ளே வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காக, வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் காரில் குண்டு இருப்பது உறுதியானதும், 'டைம்ஸ்' சதுக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த ஆயிரக்கணக்கான ஓட்டல்கள், கடைகள், உணவு விடுதிகளை அடைக்கச் சொல்லி போலீசார் உத்தரவிட்டனர்.அப்பகுதியில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அங்குக் குடியிருந்தவர்கள், 'ப்ராட்வே' பகுதியில் இருந்த சினிமா தியேட்டர்களுக்கு வந்தவர்கள் என ஆயிரக்கணக்கான மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர்.அப்பகுதியின் 43வது தெருவிலிருந்து 48வது தெருவரை ஆறு தெருக்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டன.

அதன்பின், காரின் பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு, ரோபாட் கருவி ஒன்று உள்ளே அனுப்பப்பட்டது. அதில், காரின் பின்புற இருக்கையில், 'ப்ரோபேன்' வாயு அடங்கிய மூன்று பெட்டிகள், பெட்ரோல் நிரப்பப்பட்ட 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு கேன்கள், குறைந்த சக்தி கொண்ட வெடிபொருள் பவுடர், இரண்டு டைமர் கடிகாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.உடனடியாக, செயலில் இறங்கிய வெடிகுண்டு நிபுணர்கள் அவற்றின் இணைப்பைத் துண்டித்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் கூறுகையில், 'மிகப் பெரிய விபத்து அதிர்ஷ்டவசமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. யார் எதற்காக இதைச் செய்தனர் என்பது தெரியவில்லை' என்று தெரிவித்தார்.

நியூயார்க் போலீஸ்துறையின் கமிஷனர் ரேமண்ட் கெல்லி, 'காரில் இருந்தது சக்தி குறைந்த வெடிகுண்டுதான். கார் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களின் காட்சிகள் பரிசோதிக்கப்படும்' என்றார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, 'நியூயார்க் போலீசார் விரைந்து செயல்பட்டு, வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்துள்ளனர்' என்று பாராட்டியுள்ளார்.ஏற்கனவே 2001 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர சம்பவத்தில் அதிர்ந்திருக்கும் நகரில், நேற்றைய சம்பவம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாதுகாப்பு போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாக அசம்பாவிதங்களைத் தடுத்து விட்டது.

No comments:

Post a Comment